மக்களை ஏமாற்றுவதற்காக ஜெயலலிதா பாஜகவை விமர்சித்துள்ளார் - தா.பாண்டியன்

Ilavarasan

செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (19:23 IST)
காவிரி பிரச்சனையில் பாஜக தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளது வெறும் கண் துடைப்பாகும். மக்களை ஏமாற்றுவதற்காக அவர் பாஜகவை விமர்சித்துள்ளார் என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.
 
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
 
காவிரி பிரச்சனையில் பாஜக தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளது வெறும் கண் துடைப்பாகும். மக்களை ஏமாற்றுவதற்காக அவர் பாஜகவை விமர்சித்துள்ளார்.
 
ராமர் கோவில், பொது சிவில் சட்டம் போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெற்றுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து முதல்வர் ஜெயலலிதா ஏன் மவுனம் சாதிக்கிறார். அவை குறித்தும் அவர் கருத்து கூறினால், அக்கட்சியின் கொள்கைகளை விமர்சனம் செய்தார் என கருதலாம்.
 
நாடாளுமன்ற தேர்தலில் ஊழல் காங்கிரஸ், மதவாத பாஜக உள்ளிட்ட எந்த கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது. தேர்தலுக்கு பின் கம்யூனிஸ்டு கட்சிகள் மத்திய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிக்கும். தமிழகம், புதுவையில் முழுவதும் இடதுசாரிகள் இயக்கங்கள் சார்பில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அனைத்து பகுதிகளில் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
 
மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவோர் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்டுகளை மக்கள் வரவேற்கின்றனர். நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை முடிவு செய்து கொள்ளும்படி அந்தந்த மாவட்டக் குழுக்களின் முடிவுக்கே விட்டு விட்டோம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாவட்ட குழுக்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
 
நதிநீர் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார். ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் குறித்து அவர் இதுபோன்று கூறக்கூடாது. நதி நீர் இணைப்புத் திட்டத்துக்கு எந்த மாநில முதலமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
 
தங்கள் ஆதரவை தெரிவிப்பதில் வேண்டுமானால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். உச்ச நீதிமன்றம் இத்திட்டம் குறித்து தெளிவாக உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுதான் தாமதம் செய்து வருகிறது. இதுகுறித்து உரிய வகையில் ஆராய்ந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
 
வகுப்புவாத பாஜக ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரம் தலை தூக்கும். வெறும் 8 கோடி பேர் கொண்ட ஜெர்மனி நாட்டில் வகுப்புவாதம் ஏற்பட்டதால் ஹிட்லர் சர்வாதிகாரி ஆனார். இதனால் 5 கோடி மக்கள் உயிரிழந்தனர். இந்தியாவில் 120 கோடி பேர் வசிக்கின்றனர். எனவே வகுப்பு வாத பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள்தான் ஏற்படும். அக்கட்சிக்கு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து அக்கறையில்லை. ஊழலற்ற, மதவாதமில்லாத, இயற்கை வளங்களை சுரண்டாத, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 110 லட்சம் கோடி கறுப்பு பணத்தை வெளிக்கொணரும் அரசுதான் மத்தியில் ஏற்பட வேண்டும்.
 
புதுவையில் காங்கிரஸ், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் எந்த நலனையும் செய்யவில்லை. மாநில நலனுக்காகவே மத்திய அரசே கடனுதவி வழங்குகிறது. ஆனால் கந்துவட்டிக்காரர்கள் போல மாநில அரசிடம் மத்திய அரசு கடனுக்கு வட்டி வசூலிக்கிறது. இந்த முடிவை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்