மக்களை ஏமாற்றவே இராசா கைது: ஜெயலலிதா

வியாழன், 3 பிப்ரவரி 2011 (11:05 IST)
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழலில் மிகத் தாமதமாக நடவடிக்கை எடுத்து, முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவை இப்போது கைது செய்திருப்பது மக்களை ஏமாற்றவே என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களின் வினாக்களுக்கு பதிலளித்த ஜெயலலிதா, “2ஜி அலைக்கற்றை ஊழலில் நடவடிக்கை ஏதாவது எடுத்ததாக உச்ச நீதிமன்றத்திற்கு காட்ட வேண்டுமே என்பதற்காக இராசாவை கைது செய்துள்ளது சிபிஐ” என்று கூறினார்.

“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டின் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு பதில் கூட முடியாத நிலையில் சிபிஐ இருந்தது. இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தில் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ள ஜெயலலிதா, இது நடவடிக்கை 3 ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டியது என்று கூறினார்.

தங்களைப் பொறுத்தவரை இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகக் கூறிய ஜெயலலிதா, இந்த ஊழல் பிரச்சனையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறது என்று கூறினார்.

“மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அளித்த அறிக்கையில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் 1.76 இலட்சம் கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அமைச்சர் கபில் சிபல், முன்னாள் அமைச்சர் இராசாவின் நடவடிக்கையினால் அரசுக்கு எந்த இழப்பீடும் ஏற்படவில்லை என்று கூறினார். இப்போது ஊழல் நடந்துள்ளது என்று கூறி, இராசாவை சிபிஐ கைது செய்துள்ளது. இராசாவின் நடவடிக்கையினால் எந்த இழப்பும் ஏற்படவில்லையெனில் எதற்காக இராசா கைது செய்யப்பட வேண்டும்? என்று ஜெயலலிதா வினா எழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்