ப்ளஸ் டூ மாணவர்கள் சான்றிதழ் பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு

சனி, 15 மே 2010 (17:52 IST)
ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் 14.05.2010 அன்று வெளியானதைத் தொடர்ந்து 26.05.2010 அன்று மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 6,82,607 மாணவ, மாணவிகள் ப்ளஸ் 2 தேர்வு எழுதியதில் 5,81,251 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர்கள் சான்றிதழ்களைப் பெற்றவுடன் பதிவு செய்வதற்காக ஒவ்வொரு மாவட்ட எல்லைக்குட்பட்ட வருவாய்க்கோட்டத் தலைமையிடங்களில் பதிவு செய்யலாம்.

சென்னை மண்டலத்தில் 12 இடங்களிலும், மதுரை மண்டலத்தில் 20 இடங்களிலும், திருச்சி மண்டலத்தில் 26 இடங்களிலும் மற்றும் கோவை மண்டலத்தில் 21 இடங்களிலும் புதிய வேலை வாய்ப்பு பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இது தவிர அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவுப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்புப்பதிவு மையங்களின் விவரங்கள் குறித்து நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எனவே, மாணவ, மாணவியர்கள் தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையிலுள்ள வேலை வாய்ப்புப் பதிவு மையங்களில் தங்களது பதிவுகளை மேற்கொள்ளலாம். கூடுதல் தகுதிகளையும் ஆங்காங்கே பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவுக்குச் செல்லும் மாணவர்கள் அசல் குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகல், கல்விச் சான்றிதழ், மதிப்பெண்பட்டியல் மற்றும் ஏற்கனவே 10 ம் வகுப்பு தேர்ச்சியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் அதற்கான வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் பதிவு மையங்களை அணுகி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு மையங்களில் குடிநீர், பாதுகாப்பு வசதிகள் மாவட்ட ஆட்சியர்களால் செய்து தரப்படும்.

இப்பதிவு மையங்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்வதற்காக,முன்தினம் இரவு நேரத்திலிருந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்க வேண்டியதில்லை.

வேலைவாய்ப்புப் பதிவு மையங்கள் அதிக அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் பொறுமையாக இருந்து அமைதியான முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்