போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பிரணாப்

ஞாயிறு, 1 மார்ச் 2009 (15:10 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்ய முன்வந்திருப்பதை இலங்கை அரசு பயன்படுத்திக் கொண்டு, அந்நாட்டில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து ரூ.4,910 கோடியில் புதிய அனல்மின் நிலையத்தை அமைக்க உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் நேற்று நடந்தது.

புதிய அனல்மின் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், இலங்கையில் தினந்தோறும் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. அங்கு சண்டை நடைபெறும் பகுதியில் 70 ஆயிரம் அப்பாவி மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்நிறுத்தத்துக்கு விடுதலைப் புலிகள் முன்வந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் இந்த முடிவு ஆயுதங்களை கீழே போடும் அறிவிப்பை விட குறைவான விருப்பம் தான். இருப்பினும், இந்த வாய்ப்பை இலங்கை அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டு அங்கு நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் போர் நடைபெறும் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற வசதியாக இருக்கும்.

சண்டை நடைபெறும் பகுதியில் இருந்து அப்பாவி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை இலங்கை அரசு வகுக்க வேண்டும். இதற்கு விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பும் அவசியம்.

வடக்கு இலங்கை பகுதியில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறும் மக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக மருத்துவக் குழு மற்றும் மருந்துகளை அனுப்ப இந்தியா ஏற்பாடுகளை செய்து வருகிறது என்று பிரணாப் முகர்ஜி பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்