போர் நிறுத்தம் பற்றிய குடியரசுத் தலைவர் உரை ஆறுதல் அளிக்கிறது: கருணாநிதி
வியாழன், 12 பிப்ரவரி 2009 (16:49 IST)
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஆற்றிய உரை ஆறுதல் அளிக்கிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் இன்று (12ஆம் தேதி) உரையாற்றிய குடியரசுத் தலைவர் தனது உரையில், இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும், பிரச்சனைக்கு அமைதியான முறையில் இரு தரப்பிலும் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இது, மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வரும் எனக்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமைந்துள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.