பேச்சுவார்த்தை தோல்வி: லாரிகள் வேலைநிறுத்தம் உறுதி?

வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:47 IST)
நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் ஞாயிறன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இன்றே லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருப்பதால், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ளுமாறு, லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகளுடன், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், அறிவித்தபடி லாரிகள் ஸ்டிரைக் தொடங்கும் என்று தெரிகிறது.

நாளை அதிகாலை முதல் வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சரக்குகள் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்பதால், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இன்றைய தினமே லாரிகளில் சரக்குகள் ஏற்றப்படுவது நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து முக்கிய நகரங்களுக்கு காய்கறிகள் வரத்தும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக பாதிக்கப்படும் என்பதால், காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சரக்கு போக்குவரத்தால் கிடைக்கும் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

என்றாலும் தங்களுக்கு வேறு வழியில்லை என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. என்றாலும் லாரி உரிமையாளர்கள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளதால், வேலை நிறுத்தம் திங்கட்கிழமை தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்