பேச்சுவார்த்தையில் உடன்பாடு : விரைவில் விஸ்வரூபம்

சனி, 2 பிப்ரவரி 2013 (20:58 IST)
FILE
விஸ்வரூபம் படப் பிரச்சனை தொடர்பாக கமல் ஹாசனுடன் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனையடு‌த்து ‌வி‌ஸ்வரூப‌ம் ‌விரை‌வி‌ல் வெ‌ளியா‌கிறது.

விஸ்வரூபத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு தடை, அதனைத் தொடர்ந்து கமல் வழக்கு, அதன்பிறகு விஸ்வரூபத்தை வெளியிட தனி நீதிபதி அனுமதி, அதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு, மீண்டும் உயர் நீதிமன்றம் தடை என விஸ்வரூப பிரச்சனை நீண்டுக்கொண்டே போனது.

இதனையடுத்து, கமல் விரக்தியுடன் அளித்த பேட்டி, அதன்பிறகு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கம். அதனைத் தொடர்ந்து கமலுடன் முஸ்லீம் அமைப்புகள் பேசி தீர்வுகாண முன்வந்தால் தமிழக அரசு ஏற்பாடு செய்யும் என்ற அறிவிப்பு.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் கமல் ஹாசனுடன் இஸ்லாமிய அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இத‌ற்கு தமிழக உள்துறை செயலர் வழிவகை செய்து கொடுத்தார்.

சுமார் 6 மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இஸ்லாமிய அமைப்புகள் நீக்கக் கோரிய 15 காட்சிகளில் 7 காட்சிகளை நீக்கவும், 7 காட்சிகளின் ஒலி அளவைக் குறைத்து வெளியிடவும் கமல் ஒப்புக் கொண்டதாகவும், இது தங்களுக்கு உடன்பாடானதுதான் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து கமல் அளித்த பேட்டியில், இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து தந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இஸ்லாமிய அமைப்பினருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, தான் தொடுத்துள்ள வழக்குகளை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இதேபோல படத்தின் மீதான தடையை தமிழக அரசு நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், விஸ்வரூபம் படம் விரைவில் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள உள்ளதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கமல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்