பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு ஒதுக்கியது செல்லும்: உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம்

சனி, 25 ஜூலை 2009 (11:34 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெண்களுக்கு 30 சதவீத இடத்தை ஒதுக்கியது செல்லும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த விஜயராகவன் எ‌ன்பவ‌ர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்‌ட் 1ஆ‌ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. துணை ஆ‌ட்‌சிய‌ர், துணை காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் போன்ற பதவிகளுக்காக குரூப்-1 தேர்வுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த தேர்வுக்கு 31.8.2007-க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும், ஆரம்பக்கட்ட தேர்வு 18.12.2007-ல் நடைபெறும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 30 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதில் நான் மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர். மிகவும் பிற்பட்ட வகுப்பை சேர்ந்த ஆண்களுக்கு கட்-ஆப் மார்க் 196.5 என்றும், பெண்களுக்கு கட்-ஆப் மார்க் 180 என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆண்-பெண் என்று பிரித்து பெண்களுக்கு மட்டும் சலுகை வழங்குவது அரசியல் சட்டம் 16(2)-வது பிரிவுக்கு எதிரானதாகும். இதுபோன்று பாகுபாடு செய்வதால் எனக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே, 1.8.2007 அன்று பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்.

பெண்களுக்கு என்று 30 சதவீதம் ஒதுக்குவது சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். நேரடி தேர்வில் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யக்கூடாது. பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்ததற்கான அரசு கூறும் காரணம் நியாயமற்றதாக உள்ளது. இந்த இடஒதுக்கீட்டுக்கும், பெண்கள் முன்னேற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாததால், இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் எ‌ன்று மனுவில் கூறியிருந்தார்.

இ‌ந்த மனுவை ‌நிராக‌ரி‌த்த தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.முருகேசன் ஆகியோர் கொ‌ண்ட அம‌ர்வு, பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு உள்ளது என்றும், ஆனால் இடஒதுக்கீடு முறையை பின்பற்றிதான் நிரப்பப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவிப்பு நியாயமானது தான்.

ரயில்வேக்கு ஆள் தேர்வு செய்வதிலும், வெளிமாநிலங்களில் பெண்கள் கல்லூரி வழக்குகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு முறை நியாயமானதுதான் என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. சமுதாயத்தில் பின்தங்கி உள்ளவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டுவர அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட முறையே இடஒதுக்கீடு முறையாகும்.

மேலும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடுகையில், சமீபத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு நியாயமற்றது. பாரபட்சமானது என்பதை ஏற்க முடியாது. அரசியல் சட்டத்துக்குட்பட்டுதான் இந்த இடஒதுக்கீட்டை அரசு பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ளது. ஆகவே இந்த மனு ‌நிராக‌ரி‌க்க‌ப்படு‌கிறது எ‌ன்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்