பெட்ரோல் விலை உயர்வு: முதல்வரைச் சந்தித்து தியோரா விளக்கம்

சனி, 4 ஜூலை 2009 (19:57 IST)
சென்னை வந்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதற்கான காரணங்களை விளக்கியதாக செய்திகள் கூறுகின்றன.

சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையையும், இந்திய எண்ணெய் கழகத்தின் விமான எரிபொருள் குழாயையும் துவக்கி வைத்து உரையாற்றியப் பிறகு, தமிழக முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் முரளி தியோரா.

15 நிமிடம் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர் கருணாநிதி எனபதாலும், இந்திய எண்ணெய் கழகத்தின் திட்டங்களுக்கு மாநில அரசு அளித்துவரும் ஆதரவிற்கு அவருக்குத் தான் நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.

ஆனால், இந்தச் சந்திப்பின் போது அவசர, அவசரமாக பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியது ஏன் என்பது குறித்து கருணாநிதியிடம் தியோரா விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமலேயே பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதற்கு, அதுவும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்துக் கொண்டிருக்கும்போதே அவ்வாறு செய்திருப்பதை திமுக கண்டிப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர். பாலு கூறியது காங்கிரஸ் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அரசின் முடிவிற்கு விளக்கம் அளிக்கவே முரளி தியோரா தமிழக முதல்வரை சந்தித்துப் பேசியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வரை தியோரா சந்தித்தபோது மத்திய அமைச்சர் இராசா, அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்