பூட்டிய வீட்டிற்குள் 7 மாத காலமாக இருந்த பிணம்

திங்கள், 29 ஏப்ரல் 2013 (17:31 IST)
FILE
வேலூரில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக கொலை செய்யப்பட்ட ஒருவர், பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்தது அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 52). தங்க நகைகளின் பேரில் கடன் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழில் செய்துவந்தார். இவரது மனைவி சுமதி (வயது 44), விக்னேஷ்வரன் (வயது 19), சந்திரகாந்தன் (வயது 17) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது இரு மகன்களுடன் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தாய் வீட்டுக்கு சுமதி சென்று விட்டார். வீட்டில் சிவராமன் மட்டும் தனியாக இருந்துள்ளார். கடந்த 7 மாதங்களாக சிவராமனின் வீடு வெளிப்பக்கம் பூட்டியே இருந்துள்ளது.

நகையை அடமானம் வைத்து பணம் வாங்கிய சிலர் அடிக்கடி சிவராமன் வீட்டுக்கு வந்துள்ளனர். வரும்போதெல்லாம் வீடு பூட்டியே இருந்ததால் திரும்பிச் சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் நகைகளை மீட்க முயன்ற சிலர் சித்தூரில் உள்ள சுமதியின் முகவரியை தேடிக் கண்டு பிடித்தனர். வீடு பூட்டியே இருப்பதால் அடகு வைத்த நகைளை கொடுக்கும்படி வற்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சுமதி தனது உறவினர்களுடன் நேற்று வேலூர் வந்தார். வெளிப்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சுமதி அதிர்ச்சியடைந்தார். ஹால் பகுதியில் படுத்த நிலையில் சிவராமன் பிணமாக கிடந்தார். இது தொடர்பான தகவலின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

சிவராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் உதவி இயக்குனர் பாரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதன்படி, சிவராமன் கொலை செய்யப்பட்டது கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த சிவராமனை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளிப்புற கதவை பூட்டிவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்