புத்தாண்டு கொண்டாட்டம்: 'குடி மகன்'களுக்கு காவல்துறை கெடுபிடி

புதன், 28 டிசம்பர் 2011 (15:55 IST)
புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் வேளையில் காவல்துறையினர் நட்சத்திர விடுதி உள்ளிட்ட கொண்டாட்ட விடுதிகளுக்கும், 'குடிமகன்' களுக்கும் தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்

விடிய விடிய புத்தாண்டு கொண்டாடக் கூடாது. நள்ளிரவு 1 மணிக்குள் கொண்டாட்டத்தை முடித்து விட்டு ஓட்டலில் இருந்து அனைவரையும் வெளியேற்றிவிட வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஓட்டல்களுக்கு வரும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். இளைஞர்கள் யாராவது சில்மிஷத்தில் ஈடுபட்டால் அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைக்க வேண்டும். ஓட்டலில் உள்ள பாது காவலர்கள் இவர்களை கண்காணிக்க வேண்டும்.

போதையில் தள்ளாடுபவர்கள் மது விருந்து முடிந்த பின்னர் போதையில் தள்ளாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது. மது போதையில் இருப்பவர்களை வீடு வரை கொண்டு விட டிரைவர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

இதனை மீறி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.

சென்னையில் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சென்னை போலீசார் செய்து வருகிறார்கள்.

டிசம்பர் 31-ந்தேதி அன்று இரவில் இருந்து விடிய விடிய சிறப்பு வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்