பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட்

புதன், 9 செப்டம்பர் 2009 (10:04 IST)
பிளஸ்2 தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் 12ஆ‌ம் தேதி வரை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் டி.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‌பிளஸ்2 தனித்தேர்வு இந்த மாதம் தொடங்கி அடுத்த மாதம் வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு நாளை முதல் 12ஆ‌ம் தேதி வரை ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

அவர்கள் இருப்பிடத்தின் அருகேயுள்ள தேர்வு மையத்தில் ஹால்டிக்கெட்டைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு மைய விவரம் அந்தந்த மாவட்டங்களில் நாளிதழ்களில் வெளியிடப்படும்.

ஹால்டிக்கெட்டில் தங்கள் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம், பாடங்கள், தேர்வு நாட்கள் ஆகிய விவரங்கள் சரியாக அச்சிடப்பட்டுள்ளதா? என்பதை மாணவர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த விவரங்களில் ஏதேனும் தவறு இருந்தால் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரின் கூடுதல் செயலாளரை (மேல்நிலை) நேரிலோ அல்லது தபால் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

உரிய காலத்திற்குள் தேர்வுக்கு விண்ணப்பித்தும் ஹால்டிக்கெட் கிடைக்கப் பெறாத மாணவர்களும் இந்த அதிகாரியை அணுகலாம். தபால் மூலம் ஹால்டிக்கெட் அனுப்பப் படாது. ஹால்டிக்கெட் இல்லாமல் எந்த மாணவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முதல் நாள் தேர்வுக்கு செல்லும்போது சுயமுகவரி எழுதப்பட்ட ரூ.30 மதிப்புள்ள ஸ்டாம்பு ஒட்டப்பட்ட பெரிய தபால் உறையை தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எ‌ன்று வசுந்தராதேவி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்