பிற்படுத்தப்பட்ட மாணவ‌ர்களு‌க்கு இலவச கல்வி: அமை‌ச்ச‌ர் ராம‌ச்ச‌‌ந்‌திர‌ன்

வியாழன், 9 ஜூலை 2009 (10:57 IST)
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல், நிபந்தனையின்றி இலவச கல்வி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிற்படுத்தப்பட்டோர் ந‌ல‌த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்ட‌ப்பேரவை‌யி‌ல், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு, அத்துறையின் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அளித்த பதிலுரையின்போது வெளியிட்ட புதிய அறிவிப்புகள் விவரம் :

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்பில் 98,625 பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவியர் படிக்கிறார்கள். இவர்களில், 59,190 பேர் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் நிபந்தனைகளுக்குட்பட்டு பயன்பெற்று வருகிறார்கள். மீதமுள்ள மாணவ, மாணவியர் பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக இலவச கல்வி பெற இயலவில்லை.

இலவச கல்வி பெற முடியாத மீதமுள்ள 39,075 பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கும் இலவச கல்வித்திட்டத்தினை நடப்புக் கல்வி ஆண்டு முதல் விரிவுபடுத்தப்படும். இதற்கு ஆண்டுக்கு ரூ.37 கோடி கூடுதல் செலவாகும்.

பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்காக நடத்தப்படும் விடுதிகளில் தற்போது 69,016 பேர் தங்கி படித்து வருகிறார்கள். இவ்விடுதிகளில் கூடுதலாக 4 ஆயிரம் இடங்கள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறு கடனாக ஒரு பயனாளிக்கு தற்போது வழங்கப்படும் ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்படுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகள் 1206 மற்றும் முஸ்லிம் மாணவியர்களுக்கான விடுதிகள் 5 ஆக மொத்தம் 1211 விடுதிகளுக்கும் நடப்பாண்டில் கலர் டி.வி.க்கள் வழங்கப்படும். இஸ்லாமிய மாணவியர் விடுதிகளுக்கும், ஒவ்வொரு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்துக்கு கணினிகள் வழங்கப்படும்.

நரிக்குறவர் இன குழந்தைகள், பள்ளி செல்வதை ஊக்குவிக்கும் வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மாதம் ரூ.50 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.500-ம், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.100 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும்.

துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து விடுதிகளுக்கும், இந்நிதியாண்டில் ரூ.61 லட்சத்தில் மின்சார பூச்சி அழிப்பான்கள் வழங்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.