பிரணாப்புக்கு கருப்புக் கொடி: முதல்வர் கருணாநிதி கண்டனம்

ஞாயிறு, 1 மார்ச் 2009 (15:47 IST)
தூத்துக்குடியில் அமைய உள்ள புதிய அனல் மின் நிலையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி அனல் மின் நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட இந்திய அயலுறவு அமைச்சரும், என் நீண்ட கால நண்பருமான பிரணாப் முகர்ஜி அந்த விழா மேடையிலேயே என் உடல் நிலை விரைவில் குணமாகி நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துரைத்துள்ளார். அது கேட்டு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அவரது உரையில் குறிப்பிட்டிருந்த செய்திதான் எனக்கு இரட்டிப்பான மகிழ்ச்சி அளிக்கிறது.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன் வந்துள்ளதாக வெளியான தகவலை சுட்டிக்காட்டிய பிரணாப் முகர்ஜி அந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பும் தேவை.

தமிழ் மக்களை போர் நடைபெறும் இடத்தில் இருந்த பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல விடுதலைப்புலிகள் உதவ வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதியில் இடம் பெயர்ந்து உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக இந்திய அரசு மருத்துவ குழு மற்றும் மருந்துகளை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது எனப் பிரணாப் பேசியதை கருணாநிதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடன்பிறப்பே... பிரணாப் இப்படிப் பேசியது மட்டுமல்ல, டெல்லியிலிருந்து அறிக்கையாகவும் இதை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவி சோனியா காந்தியின் கருத்தும், பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்தும் கலந்திருக்கின்றன என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

அனல் மின் நிலைய விழாவில் பிரணாப்பின் பேச்சு, அவரது அறிக்கை இவை அனைத்தும் நம் நெஞ்சத்து அனலைத் தணித்து ஆறுதல் பூங்காற்றாய் வீச செய்திருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் சில வக்கிர மூளையினர் தாங்கள் வகித்த பொறுப்புகளுக்கு தகுதியற்றோர் என்று காட்டிக்கொள்ள பிரணாப் வருகையை எதிர்த்து மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, அவரது படங்களுக்கும் தீயிட்டுப் பார்த்து திருப்தி அடைந்திருக்கின்றனர்.

யார் அவர்கள் சிங்களவத் தலைமையாளர் ராஜபக்சே தமிழர்கள் மீது நடத்தும் படுகொலைக்கு நியாய வாதம் எடுத்துரைத்த ஜெயலலிதாவின் பாதார விந்தங்களே தமக்கு ஆதார அடி பீடங்கள் என அர்ச்சித்துக் கொண்டிருப்பவர்கள் அந்த அம்மா ஜெயாவின் அத்யந்த சீடர்கள், இலங்கைப் பகைவர்களை விட்டு விட்டு இந்தியத் தலைவர்களின் படங்களுக்கு தீயிட்டு கொளுத்துகிறார்கள் என்றால் தேசப் பாதுகாப்புக்கான சட்டரீதியான நடவடிக்கைகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்