பாரதியார் பல்கலை‌க்கழக வசதிகளை தனியார் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்களும் பயன்படுத்தலா‌ம்: துணைவேந்தர்

திங்கள், 21 செப்டம்பர் 2009 (13:10 IST)
''கோவை பாரதியார் பல்கலை‌க்கழகத்தில் உள்ள வசதிகளை தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று துணைவேந்தர் டா‌க்டர் சி.சுவாமிநாதன் கூறினார்.

webdunia photo
WD
சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூ‌ரியின் புதிய கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் வி.சிவானந்தன் வரவேற்றார். கல்லூ‌ரி தலைவர் ஆர்.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். கல்லூ‌ரி செயலர் பி.அருந்ததி பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார்.

விழாவில் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேரகன் கலந்துகொண்டு வாழ்த்துறை வழங்கினார். அப்போது அவர் பேசுகை‌யி‌ல், உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு 500 ஆண்டு பாரம்பரியம் உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு 10 ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ளது.

உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை இந்தியாவிற்கு உண்டு. 36 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து உலகம் உள்ளவரையில் நிலைத்து நிற்பவர்கள் விவேகானந்தர், மகாகவி பாரதியார். உலகத்தில் இந்தியாவில்தான் 2700 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாக தட்சசீலா என்ற பல்கலை‌க்கழகம் தோன்றியது.

அதையடுத்து 2400 ஆண்டுகளுக்கு முன் அதுவும் இந்தியாவில்தான் நலந்தா பல்கலை‌க்கழகம் தோன்றியது. மற்ற நாட்டை சேர்ந்த 30 பேர் கால்நடையாக இந்த பல்கலை‌க்கழகத்திற்கு வந்து அறிஞர்களாக திரும்பி சென்றனர். 16 முதல் 18 வயதுள்ளவர்களில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பட்டம் படிப்பு முடிக்கின்றனர். 90 சதவீதம் பேர் படிப்பதில்லை. அவர்களுக்கு படித்தவர்கள் உதவி செய்ய வேண்டும்.

பூச்சியம் என்ற எண்ணை முதன்முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர். இதனால்தான் கணிதம் மற்றும் விஞ்ஞானம் வந்தது. 2020ஆம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும். மற்ற நாட்டின் மீது படையெடுக்கும் வல்லரசாக மாறவேண்டாம், நல்லரசாக மாறவேண்டும்.

கல்லூரி மாணவர்கள் சமுதாய பணியை முக்கியமாக கொண்டு மதிப்பெண்ணிற்கு கொடுக்கும் அதே முக்கியதுவத்தை மதிப்பிற்கும் கொடுத்து முன்னேற வேண்டும் என்றார்.

இதையடுத்து கோயமுத்தூர் பாரதியார் பல்கலை‌க்கழக துணைவேந்தர் டாக்டர் சி.சுவாமிநாதன் பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகை‌யி‌ல், நாட்டில் எழுத்தறிவு மூலம் மக்களின் வாழ்க்கை வளம் பெறுகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல இலவச கல்வி திட்டங்களை கொண்டு வந்துள்ளது.

பெண்கள் கல்வியில் பின் தங்கியுள்ளனர். பெண் கல்வியை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. உயர் கல்வியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 548 கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதில் 353 க‌ல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும்.

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர் கையில் உள்ளது. ஒழுக்கம் இல்லாத கல்வி மனிதனை பின் தள்ளிவிடும். அன்பு, தேசபக்தி, நேர்மை, நாணயம் ஆகியவை மாணவ, மாணவிகளிடம் முழுமையாக இருக்க வேண்டும்.

துணிந்து முடிவெடுக்க வேண்டும். முடிவெடுத்த பின் அந்த செயலை துணிந்து செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி திறமை உண்டு. அதை நாம் உணரவேண்டும். படிப்பு என்பது பணம் சம்பாதிக்கும் பணி என்றி‌ல்லாமல் சமுதாய பணியாக மாறவேண்டும். சுயதொழில் தொடங்கி பலருக்கு வேலைகொடுக்க பட்டதாரிகள் முன்வரவேண்டும்.

பாரதியார் பல்கலை‌‌க்ககத்தில் உள்ள வசதிகளை தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக தாங்கள் படிக்கும் கல்லூரியில் முதல்வரிடம் இருந்து அனுமதி கடிதம் வாங்கி வந்தால் போதும் எ‌ன்று டாக்டர் சி.சுவாமிநாதன் பேசினார்.

விழாவில் 188 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. முடிவில் தமிழ்துறை விரிவுரையாளர் ராமராஜன் நன்றி கூறினார். விழாவில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை துணை பொது மேலாளர் ஈ.மணிவேல், சர்க்கரை ஆலையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.என்.குழந்தைசாமி, எல்.ஐ.சி. வளர்ச்சி அதிகாரி கே.எம்.பச்சியப்பன், பண்ணாரி ரூரல் பவுண்டேசன் செயற்குழு உறுப்பினர் குழந்தைவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்