பாமக வன்முறை: திருமணத்திற்கு முன்பு வீட்டை இழந்த தலித் பெண்

புதன், 22 மே 2013 (13:03 IST)
FILE
மரக்காணத்தில் பாமக நடத்திய பயங்கர வன்முறையில் அனுசுயா என்ற தலித் பெண் தனது வீடு உடைமைகளை இழந்துள்ளார். அதுவும் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் தங்க வீடு இல்லை இந்தப் பெண்ணுக்கு!

பாமக பிரமுகர்கள் அன்று வன்முறையில் ஈடுபட்டபோது மரக்காணம் காலனி கட்டையன் தெருவில் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அனுசுயாவின் கூரைவீடு எரிந்து சாம்பலானது.

அனுசுயாவுக்கும் சென்னையைச் சேர்ந்த மியூசிக் டீச்சர் அருணுக்கும் இடையே இம்மாதம் 27ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏப்ரல் 25 வன்முறையில் வீடு வாசலுடன், 10 பவுன் தங்க நகை, சமையல் பாத்திரங்கள், கட்டிக்கொள்ளும் புடைவைகள் அனைத்தும் எரிந்த வீட்டோடு சாம்பலாகியுள்ளன.

பாமாக கும்பல் தன்னுடைய உடமைகளை மட்டும் எரிக்கவில்லை என்னுடைய கனவுகளையும் சேர்த்து எரித்து சாம்பலாக்கிவிட்டனர் என்று கூறுகிறார் அனுசுயா.

இத்தனைக்கும் இந்தப் பெண்ணுக்கு வன்னியர் வகுப்பில் நிறைய நண்பர்கள் உள்ளனர். தனது திருமணத்திற்கும் அவர்களை அழைத்துள்ளார் அனுசுயா.

ஏழ்மை காரணமாக +2 வரையே படிக்க முடிந்த அனுசுயா குடும்பத்தில் தாய் அங்காளம்மாதான் குடும்ப வருமானத்தை ஈட்டுபவர்.

மப்பிள்ளை வீட்டார் தங்கத்திற்கு வற்புறுத்தவில்லை என்றாலும் பாடுபட்டு சேர்த்த 10 பவுன் நகையை மீண்டும் வாங்க இயலுமா என்பதே இவர்களது கேள்வி.

மே மாதம் 27ஆம் தேதி திருமணம். ஆனால் பெண், மாப்பிள்ளையை அழைத்து தங்கவைக்க வீடு இல்லை.

இப்போது அனுசுயா குடும்பம் அண்டை வீட்டில் வசித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்