பாமகவினர் அராஜகத்தால் டாஸ்மாக்கிற்க்கு ரூ.20 கோடி இழப்பு

புதன், 31 ஜூலை 2013 (14:46 IST)
FILE
டாஸ்மாக் நிறுவனத்துக்கு ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனர் ராமதாசை கைது செய்த போது ஏற்பட்ட கலவரம் போன்றவற்றால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்துக்கும், டாஸ்மாக் நிறுவனத்துக்கும் அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாமக மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு துறை ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு வருவாய் ஆணையரகத்தில் விசாரணை நடந்து வருகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை பாதிப்பு தொடர்பான 28 வழக்குகள், சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை சேதப்படுத்தியது தொடர்பான 59 வழக்குகள் என மொத்தம் 87 வழக்குகள் நேற்று வருவாய்த் துறை ஆணையர் ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குரு ஆகிய 3 பேரும் விசாரணைக்கு ஆஜராக வில்லை. அவர்கள் சார்பில் வக்கீல் ஆஜரானார்கள்.

ஆவணங்கள் தெளிவாக இல்லை என வழக்கறிஞர்கள் கூறியதால் தெளிவான ஆவணங்கள் வழங்க, டாஸ்மாக் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து நிர்வாகங்களுக்கு உத்தர விடப்பட்டது. டாஸ்மாக் தரப்பில் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரி விக்கப்பட்டது.

மே மாதம் 1 முதல் 15 ஆம் தேதி வரை டாஸ்மாக் மது விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.

ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை நடந்த விற்பனை அளவை குறிப்பிட்டு அதை விட பல மடங்கு குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஊழியர்கள் மாலை 6 மணிக்கே கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரமுடியவில்லை. டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகையும் பெருமளவில் குறைந்ததே ஆகும் என்று டாஸ்மாக் தரப்பில் எடுத்து கூறப்பட்டது.

டாஸ்மாக்கிற்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை பாமக கொடுக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கடலூர், திருவள்ளூர், சேலம், நாகப்பட்டினம், பெரம்பலூர், நாமக்கல், தர்மபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மாநகர போக்குவரத்து கழக வழக்குகள் ஆக.13 ஆம் தேதிக்கும், டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் ஆக. 19 ஆம் தேதிக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து பாமக வக்கீல் பாலு கூறுகையில், ‘‘பொது சொத்தை சேதப்படுத்தியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட காலத்தில் டாஸ்மாக்கிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழகத்தில் முழுமையாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. ஆனால் குறிப்பிட்ட 15 நாட்களில் மது விற்பனை குறைந்து விட்டதாக கூறி இழப்பீடு கேட்பது முறையாகாது.

யாரால் இழப்பு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிட்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண்பதுதான் முறையாகும்.

இழப்பீட்டு தொகையை பாமகவிடம் வசூலிப்போம் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்த ஒரே காரணத்திற்காக அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து இல்லாததை நியாயப் படுத்துகிறார்கள்’’ என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்