பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் -ஓ.பன்னீர்செல்வம்

சனி, 12 ஜனவரி 2013 (11:41 IST)
FILE
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்று திருவாரூரில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தாமோதரன், ஜெயபால், காமராஜ், வைத்திலிங்கம், செல்லூர் ராஜு, வருவாய்த்துறை ஆணையர் ஸ்ரீதர், வருவாய்த்துறை செயலாளர் ராஜீவ்ரஞ்சன், வேளாண்மை துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கருகிய சம்பா பயிர்களை நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.

பின்னர் நேற்று காலை திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்களின் நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. வறட்சி நிலவரம் குறித்து கலெக்டர் நடராஜன் விளக்கினார். அமைச்சர்களிடம் கோரிக்கை மனுக்களை விவசாய சங்க பிரதிநிதிகள் கொடுத்தனர்.

கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், பருவமழை குறைந்ததாலும், காவிரியில் தண்ணீர் திறந்து விடாததாலும் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. 48 டிஎம்சி தண்ணீரை பெற தமிழக முதல்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

காவிரி கண்காணிப்புக்குழு மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கர்நாடக மாநிலம் தண்ணீர் தர மறுத்து பிடிவாதம் பிடித்து வருவதால் டெல்டாவில் வறட்சி நிலவுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் எடுத்துரைத்து உரிய நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து பயிர் காப்பீட்டு பிரீமியத்தை திருப்பி தர வேண்டும், ரேஷன் கடைகளில் விவசாய தொழிலாளர்களுக்கு அரிசியை 30 கிலோவாக உயர்த்த வேண்டும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிவாரண பணிகளுக்கு ரூ.10,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாய சங்கங்கள் தெரிவித்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்