பாடத்திட்டத்தில் சாதி மோதலை ஏற்படுத்தும் பாடங்களை நீக்க வேண்டும் - சீமான்

திங்கள், 23 டிசம்பர் 2013 (12:33 IST)
FILE
சென்னை பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாதி மோதலை ஏற்படுத்தும் பாடங்களை நீக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னைப் பல்கலைக் கழகத்தின் 2013 - 14 கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான பொது தமிழ் மொழிப் பாடத்திட்டத்தில் புதுமைப்பித்தன் எழுதிய “துண்பக்கேணி” சிறுகதையும், வண்ணநிலவன் எழுதிய “கடல்புரத்தில்” புதினமும் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்விரண்டுமே சாதிய அடிப்படையில் வன்மத்தையும் வெறுப்பையும் ஏற் படுத்தும் கதை பாத்திரங்களையும், சொல்லாடல்களையும் கொண்டுள்ளவை. ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவு படுத்தும் விதத்தில் ஒழுக்கமற்றவர்களாக கதை பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சாதி அடிப்படையிலான பிரிவினையையும் வெறுப்பையும் வளர்க்கும் எழுத்துக்கள், இலக்கியங்கள் என்ற போர்வையில் மாணவர்களின் பாடத்திட்டத்திற்குள்ளேயே இணைக்கப்படுமானால், அது எதிர்கால சமூகத்தை பிளவுப்படுத்து வதிலும், மாணவர்கள் மனதில் சாதிய நஞ்சை ஆழ விதைப்பதிலுமே முடிவுறும்.

சட்டப்படி இரு சமூகத்தினரிடையே வெறுப்பையும் விரோதத்தையும் ஏற் படுத்தக் கூடிய எழுத்துக்களும் பேச்சுக்களும் பொது வெளியில் தடை செய்யப் பட்டுள்ள நிலையில், பாடத்திட்டத்தில் அவற்றை இணைப்பது சட்ட விரோத மானதாகும்.

அதிலும் குறிப்பிட்ட சாதியினரை அச்சாதியின் பெயரைக் குறிப்பிட்டே இழிவான சொற்களால் குறிப்பிடப்படுவதையும், அச்சாதியைச் சேர்ந்த பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று குறிப்பிடப் படுவதையும் எவ்வாறு மாணவர்கள் படிக்க இயலும்? அச்சாதியைச் சேர்ந்த மாணவர்கள் குறுகிப் போய் நிற்பதற்கும் பிற மாணவர்கள் அவர்களை கேலி பேசுவதற்குமே இது வழிவகுக்கும்.

இதனால் மாணவர்களிடையே சாதி மோதல் உருவாகவும் வழியுள்ளது. அதற்கு பல்கலைக்கழகம் பொறுப்பேற்குமா? எனவே இக்கதைகளை உடனடியாக பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டுமென பல்கலைக் கழக நிர்வாகத்தைக் கோருகிறோம் என்று சீமான் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்