பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82 அடியாக அதிகரிப்பு

செவ்வாய், 1 நவம்பர் 2011 (12:40 IST)
webdunia photo
WD
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர். இங்குள்ள அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது.

கடந்த சில மாதங்களாக நீலகிரி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு சொற்ப அளவில் தண்ணீர் வந்தது.
அதேசமயம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கீழ்நோக்கி சென்றது. இதனால் விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி, கூடலூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முனுஞூ வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை எட்டு மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு ஆறாயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் 82 அடியாக அதிகரித்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்