பணத்திற்காக பள்ளி மாணவனை கடத்தி கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர்

Ilavarasan

வியாழன், 24 ஏப்ரல் 2014 (13:39 IST)
சிதம்பரத்தில் பள்ளி மாணவனை பணத்திற்காக கடத்தி கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி வைத்த மாணவனின் பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கந்தசாமி. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது 16). சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து முடித்திருந்தார். அடுத்து பிளஸ்–2 சேருவதற்காக முன்கூட்டியே டியூசனுக்கு சென்றும் படித்து வந்தார். 
 
கடந்த 21 ஆம் தேதி மாலை சூர்யபிரகாஷ் டியூசனுக்கு சைக்கிளில் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் சூர்யபிரகாஷ் வீட்டுக்கு வரவில்லை. ஆனால் அவருடைய சைக்கிள் மட்டும் வீட்டு முன்பு தனியாக நின்றது. எனவே சூர்யபிரகாஷ் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு விளையாட சென்றிருக்கலாம் என்று பெற்றோர்கள் கருதினார்கள். இரவு வெகுநேரமாகியும் அவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 
 
சூர்யபிரகாசிடம் செல்போன் உண்டு. ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒருதடவை மட்டும் இணைப்பு கிடைத்தது. அதில் வேறொரு மர்ம நபர் பேசினார். அவர் ‘‘உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறோம். 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் மகனை ஒப்படைக்கிறோம்’’ என்று கூறிவிட்டு போனை ஆப் செய்துவிட்டார். இது தொடர்பாக போலீசில் தெரிவிக்கப்பட்டது.
 
காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். கந்தசாமி வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள இன்னொரு வீட்டில் ஜவகர்பாபு (35) என்பவர் வசித்து வந்தார். அவர் அடுக்குமாடி  குடியிருப்பின் பின் பகுதியில் ஓட்டலும் நடத்தி வந்தார்.
 
சூர்யபிரகாஷ் காணாமல் போனதற்கு பிறகு அவர் ஓட்டலை திறக்கவில்லை. ஓட்டல் பூட்டியே கிடந்தது. ஓட்டலுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இது தெரியாமல் இருப்பதற்காக ஜவகர்பாபு ஓட்டல் முன்பு  வாசனைக்காக பினாயிலை தெளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சூர்ய பிரகாசின் பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
 
காவல்துறையினர் விரைந்து வந்து ஓட்டலை திறந்து பார்த்தார்கள். உள்ளே ரத்தக்கரையுடன் சாக்குமூட்டை ஒன்று இருந்தது. அதற்குள் சூர்யபிரகாஷ் கொலை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தார். 
 
இதையடுத்து ஜவகர் பாபுவை காவல்துறையினர் கைது செய்தனர். ஜவகர்பாபு ஓட்டல் நடத்தியதுடன், ஆட்டோவும் ஓட்டி வந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவருடைய ஆட்டோவை பொதுமக்கள் வைத்து கொளுத்தினார்கள்.
 
காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதமானதால்தான் கொலை நடந்ததாக குற்றம் சாட்டி சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப் படுத்தினார்கள். சூர்யபிரகாசை,  ஜவகர்பாபு ஏன் கொலை செய்தார்? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதுபற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காணாமல்போன அன்று இரவே சூர்யபிரகாசை கொலை  செய்து பிணத்தை மறைத்து வைத்தது தெரிய வந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்