நித்யானந்தாவுக்கு தடை விதிக்க முடியாது-கோர்ட்

வியாழன், 3 மே 2012 (15:16 IST)
FILE
மதுரை ஆதீனம் பதவி வகிக்க நித்யானந்தாவுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரை ஆதீனம் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆதீனத்துக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளது. இந்த ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுள்ளார். இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. மதுரை ஆதீனமாக பொறுப்பு ஏற்க விதிகள் உள்ளன. அதற்கு மாறாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுள்ளார்.

நித்யானந்தா இதற்கு ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார். இது லஞ்சம் கொடுத்ததற்கு சமமாகும். மதுரை ஆதினம் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில் இவர் பொறுப்பு ஏற்றுள்ளார். எனவே மதுரை ஆதீனமாக நித்யானந்தா தொடர தடை விதிக்க வேண்டும். ஆதீன சொத்துக்களை கையாளவும் அவருக்கு தடை விதிக்கவேண்டும் என்று நித்யானந்தாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

இந்த மனுவை கோடை விடுமுறை கால நீதிபதிகள் சி.எஸ். கர்ணன், ரவிச்சந்திர பாபு விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜராகி மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தா தொடர தடை விதிக்க கேட்டுக் கொண்டார். அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இது தொடர்பாக இந்து அறநிலையத்துறையிடம் முறையீடு செய்யும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனால் மதுரை ஆதீன சொத்துக்களை நிர்வகிப்பதில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்