நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

புதன், 2 மே 2012 (21:40 IST)
மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஆதீனத்துக்கு நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை கண்டித்து மற்ற ஆதீன மடாதிபதிகள் நேற்று கூட்டம் நடத்தினர்.

அதில், இன்னும் பத்து நாட்களுக்குள் நித்தியானந்தா நியமனம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதுரை ஆதீனத்திற்கு கெடு விதித்தனர்.

மேலும்,10 நாட்களுக்குள் இந்த நியமனத்தை திரும்ப பெறாவிட்டால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் சோபலைக் கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நித்தியானந்தா நியமனம் சைவ நெறிமுறைகளுக்கு எதிரானது. ஒரு சன்னியாசி மட்டுமே ஆதினமாக பொறுப்பேற்க தகுதியுள்ளவர் என்றும், சர்ச்சைக்குள்ளான நித்தியானந்தா நியமனம் தவறானது என்றும் கூறப்பட்டுள்ளது.

நித்தியானந்தா பணம் கொடுத்து பதவியை விலைக்கு வாங்கியுள்ளதாகவும் நிர்ப்பந்ததின் பேரிலேயே, மதுரை ஆதினம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்யானந்தா, தற்போது ஆதீனமாக இருப்பவரை போதையிலேயே வைத்துள்ளார். அத்துடன் நித்யானந்தா மீது கர்நாடகா நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலவையில் இருப்பதால், நித்யானந்தாவின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்