நான் தமிழகத்துக்கு எதிரானவன் அல்ல: ஜெயராம் ரமேஷ்

வெள்ளி, 23 அக்டோபர் 2009 (15:32 IST)
தமிழகத்திற்கு எதிரானவன் நான் அல்ல எனத் தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், தமிழக மக்களின் நலனுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகக் கூறி மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு எதிராக நவம்பர் 1ஆம் தேதி மதுரையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கண்டனக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இதுபற்றி புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், “தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக நான் எதையும் செய்யவில்லை. ஏனென்றால் நானே ஒரு பகுதி தமிழன் தான். அதுமட்டுமின்றி எனது மனைவி ஜெயஸ்ரீ தமிழகத்தைச் சேர்ந்தவர். 100% தமிழச்சி. அப்படி இருக்கும் போது நான் எப்படி தமிழகத்திற்கு எதிராக இருப்பேன் எனக் கேள்வி எழுப்பினார்.

தி.மு.க.வை உருவாக்கிய அறிஞர் அண்ணா, கட்சித் தலைவர் கருணாநிதி மற்றும் தி.மு.க. மீது தாம் அதிக பற்றுதல் வைத்துள்ளதாகவும், தமிழகம் எல்லா துறைகளிலும் நல்ல வளர்ச்சியை பெற்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது பற்றி தாம் நிறைய எழுதி இருப்பதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்