நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல - தொல்.திருமாவளவன்

Ilavarasan

வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (15:36 IST)
நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல என்பதால்தான், என்னை கருணாநிதி அரவணைக்கிறார். தேர்தல் அரசியலுக்காக, யாராவது அவதூறு பரப்பினால் அதை நம்ப வேண்டும் என சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
 
சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டப்பட்டினம் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர் பேசியது: ஒடுக்கப்பட்ட மக்களுக்குகாகவும், தமிழர்களுக்காகவும் போராடுகிற வாழ்க்கையை நான் தேர்வு செய்து கொண்டேன். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த களத்தில் அப்படிதான் பணியாற்றி கொண்டிருக்கிறேன். அனைத்து சமூகத்தினரையும் நேசிக்கக் கூடியவனாகவும், மக்களுக்காக வாதாடக்கூடியவனாகவும், போராடக் கூடியவனாகவும் எனது பொது வாழ்வை நடத்தி கொண்டிருக்கிறேன்.
 
நான் கடந்த 5 ஆண்டு காலம் என்ன சாதித்தாய் என்று கேட்டால், நான் அதை செய்தேன், இதை செய்தேன் என்று சொல்லுவதை விட ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வருமான வரம்பு நாலரை லட்சம் என அரசு விதித்துள்ளது. நாலரை லட்சம் வருமான வரம்பிற்கு மேல் உள்ளவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடையாது என அரசானை சொல்கிறது. எனவே நான் பிரமதரை சந்தித்து, ஆடு, மாடு மேய்க்கும், ஏழை, எளிய மக்களின் ஆண்டு வருமான வரம்பினை ரூ.12 லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு கொடுத்தேன். மனுவை ஏற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், வருமான வரம்பை ரூ.9 லட்சமாக உயர்த்தி வழங்கினார். இதன் மூலம் வன்னியர், பிள்ளைமார், முதலியார் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அரசாணை பெற்று தந்தேன். அனைத்து சமுதாயத்தினரையும் நான் நேசிப்பதற்கு இதுவே சான்றாகும்.
 
ஏனென்றால் எப்படியாவது அவதூறு பரப்பி, அதன் மூலம் ஒரு கலவரமான சூழலை உருவாக்க கடந்த இரு வருடங்களாக என்னை தம்பி, தம்பி என்று அன்பாக கூறி அழைத்த எல்லோரும் மாற்றிச் சொல்லும் நிலை உள்ளது. எனவே அதை நம்ப வேண்டாம். சிதம்பரம் தொகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைக்க அரசிடம் நிதி பெற போராடுவேன். மேலும் தடுப்பணை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல் தவனையாக ரூ.50 லட்சம் வழங்குவேன் என வாக்குறுதி அளிக்கிறேன் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
 
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கடலூர் மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திருமாவளவனை அறிமுகப்படுத்தி பேசினார். அவர் பேசியது: திருமாவளவன் வெற்றி பெற்று கடந்த 5 ஆண்டுகள் தொகுதியில் மக்கள் அமைதியாக வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தார். மீண்டும் வெற்றி பெற்றால் நமது பகுதி மேலும் அமைதியாக இருக்கக்கூடிய வாய்ப்பும், நமக்கெல்லாம் பாதுகாவலராக இருக்கின்ற பொறுப்பும் ஏற்படும். நேரத்திற்கு நடிப்பவராக இல்லாமல், கொள்கை உடையவர் திருமாவளவன் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பிரச்சார தொடக்கக் கூட்டத்தில் குமராட்சி ஒன்றிய திமுக செயலாளர் ரா.மாமல்லன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசு, மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
முன்னதாக ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் சிறப்பு அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் திருமாவளவனுக்கும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கும் மலர் மாலை, மலர் கிரீடம் அணிவித்து, வெற்றி வாளாக வீரவாள் வழங்கப்பட்டு, ஊர் மக்களால் கவுரவிக்கப்பட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்