நளினி விடுதலை கோரும் மனு: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (18:00 IST)
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனு தொடர்பாக, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான், கடந்த 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். என்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி கடந்த 2006ம் ஆண்டில் ஆலோசனை கமிட்டியிடம் மனுத் தாக்கல் செய்தேன். ஆனால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன் பரிந்துரையை ஏற்று, தமிழக அரசும் என்னை விடுதலை செய்ய மறுத்துவிட்டது.

இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆலோசனை கமிட்டி மீண்டும் கூடி, எனது கோரிக்கையை பரிசீலனை செய்யும்படியும், இதுதொடர்பாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கை குறித்து விரைவில் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி ஜோதிமணி, இதுதொடர்பாக இரு வாரங்களுக்குள் பதில் தரும்படி மத்திய அரசின் உள்துறை செயலாளர் மற்றும் ஆலோசனை கமிட்டி ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்