நளினி புகார்: விசாரணை குழு அமைக்க பா.ஜனதா வலியுறுத்தல்

சனி, 15 மே 2010 (15:16 IST)
சிறையில் தம்மை கொலை செய்ய முயற்சி நடப்பதாக நளினி கூறிய புகார் குறித்து விசாரிக்க, விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை, ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா சந்தித்துச் சென்ற பிறகுதான், இலங்கையில் தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுபோல், சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள், மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்டார்.

மேலும், இருவரின் சந்திப்பின்போது சட்ட விதிகளின்படி, உடன் இருந்திருக்கவேண்டிய சிறை அதிகாரிகளும்,காவல்துறை அதிகாரிகளும் விதிமுறைகளை மீறி அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது யார்? இந்தச் சந்திப்பின்போது என்னென்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது குறித்தும் வெளிப்படுத்த வேண்டும்.இவர்கள் சந்திப்பின் போது சிறை அதிகாரிகள் விதிமுறைகளை மீறி நடந்தகொண்டது ஏன்? என்பது குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்புதான் நளினிக்கு சிம் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இது பிரியங்கா சந்திப்புக்கு பின்பா? அல்லது முன்பா? யாரால் கொடுக்கப்பட்டது? ஆகியவை குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

நளினியின் தொலைபேசி தொடர்பு, டெல்லியையும் எட்டியுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சிறையில் அவரை கொலை செய்ய முயற்சி நடப்பதாக, நளினி நம்புவதற்கு காரணம் என்ன? யார், யார் அவரை கொலை செய்ய தூண்டக்கூடும் என்பதையும் கண்டறிய வேண்டும்.

இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் குறித்த உண்மை நிலை வெளியாகும் வகையில், விசாரணைக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்