நலிந்த நாடக கலைஞர்களுக்கு உதவ நினைவலைகள் விழா: நடிகர் சங்கம்

ஞாயிறு, 12 ஜூலை 2009 (16:46 IST)
நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு உதவும் வகையில் வரும் ஆகஸ்ட் 15 முதல் 23ஆம் தேதி வரை “நினைவலைகள்” என்ற பெயரில் நாடக விழா நடத்த தமிழக நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை தியாகராயா நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் ஆகஸ்ட் 15 முதல் 23ஆம் தேதி நினைவலைகளஎன்ற பெயரில் நாடக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

அசோகன், வியட்நாம் வீடு உட்பட பிரபல நாடகங்கள் இதில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாடகத்திலும் முன்னணி நடிகர்கள் பங்கேற்று நடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதிநாளில் சரத்குமார், ராதாரவி, விஜயகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதுபற்றி சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் நினைவலைகள் விழா நடத்தப்படுகிறது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க ரஜினி ஒப்புதல் தெரிவித்துள்ளார் எனக் கூறினார்.

நடிகர்கள் சூர்யா, ஸ்ரீகாந்த், பூச்சி முருகன், நம்பிராஜன், கே.ராஜன், நந்தகுமார், டி.என்.கிருஷ்ணன், சுவாதி, பாத்திமா பாபு ஆகியோர் நடிகர் சங்கத்தின் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்