நடிகர் தியாகு கொடுத்த புகாரா‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் துன்புறுத்துவதாக சகோதரர் வழ‌க்கு

சனி, 8 ஆகஸ்ட் 2009 (12:25 IST)
நடிகர் தியாகு கொடுத்த புகா‌ரி‌ன் அடிப்படையில் காவ‌ல்துறை‌யின‌ர் த‌ன்னை துன்புறுத்துவதாக அவரது சகோதரர் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுதாக்கல் செய்துள்ளார்.

கோவையை சேர்ந்த நடிக‌ர் ‌திராகு‌வி‌ன் சகோதர‌ர் எஸ்.ராஜாராமன் (42) எ‌ன்பவ‌ர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தாக்கல் செய்து‌ள்ள மனுவில், எ‌ங்க‌ள் குடும்ப சொத்து தொடர்பாக மாவட்ட வழக்கு தொடர்ந்தேன். அந்த சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ கூடாது என்று இடைக்கால தடை வாங்கினேன். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

எனது சகோதரர் தியாகு சினிமாவில் நடிக்கிறார். அரசியல் செல்வாக்கு உடையவர். உயர்மட்டத்தில் தொடர்புடையவர். நான் வழக்கு தொடர்ந்த காரணத்திற்காக அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எனக்கு, எனது குடும்பத்தாருக்கும் எதிராக பொய் புகார் கொடுத்துள்ளார். எனக்கும், தியாகுக்கும் உள்ள பிரச்சனை சிவில் பரிவர்த்தனை பிரச்சனையாகும். இதில் காவ‌ல்துறை‌யின‌ர் தலையிட உரிமையில்லை.

தியாகு கொடுத்த புகார் அப்படையில் காவ‌ல்துறை‌யின‌ர் என்னை துன்புறுத்தி வருகிறார்கள். ஒரு வழக்கில் காவ‌ல்துறை‌யின‌ர் என்னை கைது செய்துவிட்டனர். என்னை மட்டுமல்லாமல் எனது குடும்பத்தாரையும் காவ‌ல்துறை‌ நிலையத்துக்கு அழைத்து விசாரிக்கிறார்கள். எனவே முன்‌பிணை கேட்டு மனுதாக்கல் செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனக்கு ஒரு மகள் உள்ளார். இந்த பிரச்சனை காரணமாக மகளை சரிவர கவனிக்க முடியவில்லை. வழக்கை வாபஸ் பெற்று உடன்பாட்டுக்கு வருமாறு என்னை அச்சுறுத்துகிறார்கள். வழக்கு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நிலுவையில் இருக்கும்போது இவ்வாறு நிர்ப்பந்தம் செய்வது ‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு குற்றமாகும்.

ஆகவே, எனது சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் மயிலாடுதுறை காவ‌ல்துறை‌யின‌ர், கும்பகோணம் கிழக்கு காவ‌ல்துறை‌யின‌ர் என்னை மிரட்டி வருகிறார்கள். ஆகவே, இந்த விஷயத்தில் என்னை அச்சுறுத்தக்கூடாது என்று கா‌வ‌ல்துறை‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட வேண்டும். காவ‌ல்துறை‌யி‌ன‌ரி‌ன் நடவடிக்கையால் எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஆபத்து உள்ளது எ‌ன்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை ‌விசா‌ரி‌த்த நீதிபதி ஆர்.ரகுபதி, இதுபற்றி பதில் தருமாறு காவ‌ல்துறை தலைமை இய‌க்குனரு‌க்கு‌ம் (டி.ஜி.பி.), சம்பந்தப்பட்ட காவ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் 3 வாரத்திற்குள் பதில் தரும்படி தா‌க்‌கீது அனுப்ப உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்