த‌மிழக அர‌சி‌ன் ‌மீது ‌விஜயகா‌ந்‌த் ச‌ந்தேக‌ம்

புதன், 4 ஜூலை 2012 (12:43 IST)
WD
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் தரப்பட்டுள்ள க‌ட்‌சிக‌ளி‌ன் தகவல்களை கவனிக்கிறபொழுது, தமிழ்நாடு அரசு வேண்டும் என்றே திட்டமிட்டு தே.மு.தி.க. இடம் பெறாமல் பார்த்துக் கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் தோன்றுவதாக அ‌க்க‌ட்‌சி‌ தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இந்த ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ஆங்கில பதிப்பில் 220ஆம் பக்கத்தில் மாநில கட்சிகளின் அங்கீகாரம் குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு மாநிலக் கட்சி மொத்த வாக்குகளில் 6 சதவிகிதமும், சட்டமன்றத்திற்கான இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருந்தால் அது அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்படும். இந்த விவரங்களை மேற்கண்ட புத்தகத்தில் வெளியிட்டுவிட்டு, உதாரணத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., என்ற கட்சிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. சொல்லப்பட்ட உதாரணங்களுக்கும், வெளியிடப்பட்ட விளக்கப் படங்களுக்கும் பொருத்தமில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தே.மு.தி.க. ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று சென்ற ஆண்டு ஜூன் 10‌ஆ‌ம் தேதியே தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் உதாரணத்திற்கு என்ற சொல்லப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தே.மு.தி.க. இடம் பெறவில்லை. வெளியிடப்பட்ட படங்களிலும் முரசு சின்னம் காணப்படவில்லை.

இந்த பாடப்புத்தகத்தில் தரப்பட்டுள்ள இந்த தகவல்களை கவனிக்கிறபொழுது, தமிழ்நாடு அரசு வேண்டும் என்றே திட்டமிட்டு தே.மு.தி.க. இடம் பெறாமல் பார்த்துக் கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட சமச்சீர் கல்வித் திட்டத்திற்கான 10ஆம் வகுப்பு ஆங்கில சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் வெளிவந்துள்ள விவரங்கள் அரசின் அக்கறையற்றதன்மையையும், நிர்வாகச் சீர்கேட்டையும் காட்டுவதாகவே அமைந்துள்ளன. சம்பந்தப்பட்ட பாடப்புத்தகத்தில் தரப்பட்டுள்ள தவறான தகவல்களை தமிழக அரசு உடனடியாக திருத்தி வெளியிடவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்