தோழியை பார்க்க சென்ற வாலிபர் அடித்துக்கொலை; சிதம்பரம் அருகே பயங்கரம்

ஞாயிறு, 3 நவம்பர் 2013 (09:35 IST)
FILE
சிதம்பரம் அருகே நள்ளிரவில் பெண் தோழியை பார்க்க சென்ற வாலிபர் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகிறார்கள்.

தீபாவளியன்று காதலி பரிசுப்பொருள் தருவதாக கூறியதையடுத்து சென்ற வாலிபர் படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் இடைத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது22). இவரும், சிதம்பரம் பெரியார் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் நட்புடன் பழகி வந்தனர். நேற்று தீபாவளி பண்டிகை என்பதால் பரிசு பொருள் கொடுப்பதற்காக காதலி சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்டு இரவு 11.30 மணிக்கு தனது வீட்டின் அருகே வரும்படி கூறினார்.

இதனைத்தொடர்ந்து சீனிவாசன், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் கோபி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது...

அங்கு அந்தப் பெண்ணின் உறவினர்கள் பார்த்திபன், அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சீனிவாசனை பார்த்ததும் பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்த இருவரும், இந்த நேரத்தில் இங்கு உனக்கு என்ன வேலை என்று கேட்டனர்.

இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் பெண்ணின் உறவினர்களான இருவரும் சீனிவாசனையும், அவரது நண்பர் கோபியையும் உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

இதில் கோபியின் மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது. இதனைத்தொடர்ந்து சீனிவாசன் உடனே ஆட்டோ பிடித்து கோபியை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அதன் பின்னர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக மீண்டும் தன் காதலி வீட்டருகே சென்றார். அப்போது...

அங்கு நின்ற பார்த்திபன், மணிகண்டன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜீ, ரங்கநாதன் ஆகியோர் சேர்ந்து சீனிவாசனை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலின்பேரில் சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை அடித்து கொலை செய்த அந்த மாணவியின் உறவினர் பார்த்திபன் மற்றும் ராஜீ, ரங்கநாதன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்