தேர்தல் நேரத்தில் உண்ணாவிரதம்: கருணா‌நி‌தி‌க்கு எ‌திரான மனு ‌நிராக‌ரி‌ப்பு

வெள்ளி, 24 ஜூலை 2009 (09:32 IST)
தேர்தல் நேரத்தில் தி.மு.க. சார்பில் முழு அடைப்பு நடத்தியதும், தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததும் தேர்தல் நன்னடத்தை விதிக்கு எதிரானது என்று தொடரப்பட்மனுவை சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌நிராக‌ரி‌த்தது.

சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பொதுநல மனு ஒ‌ன்றை தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர். அ‌தி‌ல், பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்டபிறகு, தி.மு.க. சார்பில் இலங்கை தமிழர்களுக்காக முழு அடைப்பு நடத்தியதும், தி.மு.க. தலைவர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்ததும் தேர்தல் நன்னடத்தை விதிக்கு எதிரானது.

ஆகவே, தி.மு.க. மீது தேர்தல் ஆணைய‌ம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் பதவி ஏற்க அனுமதிக்க கூடாது என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு‌வி‌ற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா பதில் மனுவை தாக்கல் செய்தார். அ‌தி‌ல், ''தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் உண்ணாவிரதம் இருப்பது, போராட்டம் நடத்துவது, அரசியல் கட்சி சார்பில் முழு அடைப்பு நடத்துவது, தேர்தல் நன்னடத்தையை மீறிய செயல் என்று தேர்தல் விதியில் கூறப்படவில்லை'' என்று மனுவில் கூறியிருந்தார்.

தி.மு.க. நடத்திய முழு அடைப்பு, கருணாநிதி நடத்திய உண்ணாவிரதம், வேட்பு மனு தாக்கல் செய்யும் நடைமுறைகளில் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்றும், இதுதொடர்பாக யாரும் புகார் கொடுக்கவில்லை என்றும் பதில் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் மனுதாரர் கோரியபடி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது என்றும் அந்த மனுவில் நரேஷ்குப்தா கூறியிருந்தார்.

இந்த மனு ‌விசாரணை‌க்கு உக‌ந்தத‌ல்ல எ‌ன்று கூ‌றி மனுவை ‌நிராக‌‌ரி‌த்த தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.முருகேசன், ''இந்த மனுவில் எழுப்பப்பட்ட கேள்விகளை தேர்தல் ஆணைய‌ம் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று எண்ணுகிறோம். அவ்வாறு எடுத்தால் இனி வரும் தேர்தல்களில் பயனுள்ளதாக இருக்கும்'' எ‌ன்று ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்