தேர்தலுக்காக அனைத்து நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை; மீறினால் வழக்குப்பதிவு

Ilavarasan

வியாழன், 24 ஏப்ரல் 2014 (07:49 IST)
மக்களவைத் தேர்தலையொட்டி தொழில்நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வியாழக்கிழமை (ஏப்.24) சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுப்பு அளிக்க மறுக்கும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியது: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்.24) நடைபெறுகிறது.
 
அதைத் தொடர்ந்து அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப்போட ஏதுவாக 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 135 பி அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து  பணியாளர்களுக்கும் வியாழக்கிழமை (தினக்கூலி, தாற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள்) சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால் சில நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் அனுமதி மட்டும் அளிப்பதாக தொழிலாளர் துறைக்கு தகவல்கள் வந்துள்ளன. அதனால் விதிமுறையை மீறும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்