தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இராமகிருஷ்ணன் கைது தவறு: உயர் நீதிமன்றம்

புதன், 29 ஜூலை 2009 (13:11 IST)
கோவை மாவட்டம் நீலாம்பூரில் ஆயுதங்களுடன் சென்ற இராணுவ வாகனங்களை வழிமறித்து நிறுத்தியதற்காக கைது செய்யப்பட்ட பெரியார் தி.க. பொதுச் செயலர் இராமகிருஷ்ணனை தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கு. இராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு (habeas corpus) மனுவில், “இராணுவ வாகனங்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தனது கணவரை இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தியுள்ளனர்.

அவரை விடுதலை செய்தால் இதுபோன்ற நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபடுவார் என்று அவர் கைது செய்ததற்கான காரணத்தை அரசு கூறியுள்ளது. மீண்டும் இதுபோன்ற செயல்களில் இராமகிருஷ்ணன் ஈடுபடுவார் என்று கூறுவது யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாற்று ஆகும். எனவே அவரை தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது சட்ட விரோதமானத” என்று கூறியிருந்தார்.

வசந்தியின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் ச. துரைசாமி, இளங்கோ ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் எஸ்.ஜே. முகோபாத்யா, இராஜா இளங்கோ ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, இராமகிருஷ்ணனுக்கு எதிராக தேச பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்திய கோவை மாவட்ட ஆட்சியாளர், சரியாக சிந்திக்காமல் அவருக்கு எதிராக அச்சட்டத்தை பயன்படுத்தியுள்ளார் என்றும், அவரை விடுவிக்குமாறும் தீர்ப்பளித்தது.

கடந்த மே மாதம் 2ஆம் தேதி கோவை மாவட்டம் நீலாம்பூர் புறவழிச் சாலையில் ஆயுதங்களுடன் சென்ற இராணுவ வாகனங்களை பெரியார் திராவிடர் கழகத்தினர், ம.தி.மு.க.வினர் தடுத்து நிறுத்தினர். அதிலிருந்த ஆயுதங்களை வெளியில் எடுத்து போட்டனர். தூர இலக்குகளை குறிவைத்து செலுத்தும் ஆயுதங்கள் அந்த வாகனங்களில் இருந்தது.

இந்த ஆயுதங்கள் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர் தொடுத்துவரும் சிறிலங்க இராணுவத்திற்குக் கொடுக்கவே கொண்டு செல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர். அவர்களை தடுத்து நிறுத்தி காவலர்கள் கைது செய்தனர்.

இதுகுறித்து பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய இராணுவத்தின் தென்பகுதி தளபதி, இராணுவ வீரர்கள் பயிற்சிக்கு ஹைதராபாத் சென்றிருந்ததாகவும், அங்கிருந்து ஆயுதங்களுடன் மதுகரை முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர் என்றும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்