தீக்குளித்த திமுக தொண்டர் சாவு; ரூ. 2 லட்சம் உதவி

ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (16:27 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் திமுக இளைஞர் அணி நேற்று நடத்திய மனித சங்கிலியின்போது தீக்குளித்த திமுக தொண்டர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை தரமணி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(55). இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர் தி.மு.க. பகுதி பிரதிநிதியாகவும், டாக்டர் கலைஞர் மன்ற செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

நேற்று திமுக இளைஞர் அணி சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வலியுறுத்தியும் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தின்போது கிண்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்க அவர் சென்றார்.

அங்கு அவர் திடீரென தனது பையில் வைத்திருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீயைக் வைத்துக் கொண்டார்.

உடலில் பரவிய தீயால் கதறியபடி அங்கும் இங்கும் ஓடிய அவரைப் பார்த்து அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அவரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர், சிவப்பிரகாசத்தை மீட்டு கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கிண்டி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், சிவப்பிரகாசம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். மருத்துவமனை வளாகத்தில் குழுமியிருந்த திமுகவினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

முன்னதாக சிவப்பிரகாசத்தை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,"இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக சிவப்பிரகாசம் தீக்குளித்துள்ளார்.

இலங்கையில் கொடுமைக்கு ஆளாகும் தமிழர்களைக் காப்பாற்றவும், இரண்டு தரப்பினரும் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட்டு போரை நிறுத்தவும் முதல்வர் கருணாநிதி முயற்சி மேற்கொண்டுள்ளார். சிவப்பிரகாசம் தீக்குளித்தது வருந்தத்தக்கச் செயல் " என்று கூறினார்.

இதனிடையே சிவப்பிரகாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவலை தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்