தீக்குளிக்க வேண்டாம்: திமுக வேண்டுகோள்

ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (16:36 IST)
இலங்கைத் தமிழர்களைக் காக்கக்கோரி தி.மு.க. தொண்டர் சிவப்பிரகாசம் தீக்குளித்ததைத் தொடர்ந்து, திமுகவினர் யாரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று நிதியமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான க. அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தரமணியில் உள்ள வீட்டில் உயிரிழந்த சிவப்பிரகாசத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், கனிமொழி எம்.பி. ஆகியோர் இன்று சிவப்பிரகாசத்தின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ரூ.2 லட்சம் நிதியை அவரது மனைவி மனோரமாவிடம் அமைச்சர் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்ய கோரியும் ஈழத்தமிழர்களை காக்க வலியுறுத்தியும் திமுக. இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டம் நடந்துள்ளது.

அதில் பங்கேற்ற சிவப்பிரகாசம் உணர்ச்சிப் பெருக்குடன் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது தியாகத்திற்கு எதுவும் ஈடாகாது என்று கூறினார்.

திமுக சார்பில் அந்த தியாகத்தை மதித்து, போற்றும் அதே வேளையில், இதுபோன்ற தீக்குளிப்பு செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக அன்பழகன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்