திமுகவில் ஸ்டாலினுக்கு உள்ள உரிமை எனக்கும் உண்டு - மு.க.அழகிரி

Ilavarasan

திங்கள், 7 ஏப்ரல் 2014 (10:28 IST)
திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை எனக்கும் உள்ளது என மு.க.அழகிரி தெரிவித்தார்.
 
முதுகுளத்தூரில் வழக்குரைஞர் மயில்வேல் இல்ல காதணி விழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மு.க.அழகிரி பேசியது: என்னை நம்பி தென்மாவட்டங்களில் பல குடும்பங்கள் உள்ளன. மதுரையில் என்னை வாழ்த்தி ஒரு போஸ்டர் ஒட்டியதால் கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது. கட்சியிலிருந்து நீக்கினாலும் நான் திமுகவை விட்டு விலக மாட்டேன். கருணாநிதிதான் எனக்கு தலைவர். அவர்தான் என் தந்தை. மு.க.ஸ்டாலினுக்கு கட்சியில் என்ன உரிமை உள்ளதோ, அதேபோல எனக்கும் கட்சியில் உரிமை உண்டு. என்னை யாரும் கட்சியை விட்டு விலக்க முடியாது.
 
திமுகவை அண்ணா தொடங்கினார். அதன்பின் கருணாநிதி மட்டுமே தலைவர். அருகில் இருப்பவர்கள் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் என்னைப்பற்றி கருணாநிதியிடம் தவறான செய்திகளை கூறி வருகின்றனர். சினிமாவில் வில்லன்கள் கத்தியைக் காட்டி மிரட்டுவது போல் மிரட்டி, என் மீது நடவடிக்கை எடுக்க வைத்துள்ளனர். தென்மாவட்டத்தில் என்னை நம்பியுள்ளவர்களுக்கு என்றும் துணையாக இருப்பேன் என்றார் அவர்
 
முன்னதாக, காரியாபட்டி அருகேயுள்ள கல்குறிச்சியில் கணக்கனேந்தல் திமுக கிளைச் செயலர் இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டு மு.க.அழகிரி பேசுகையில், திமுகவுக்காக உழைத்தவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். திமுகவில் உறுப்பினரே இல்லாத முகம்மது ஜலீலிடம் பணம் வாங்கி கொண்டு ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
 
முகம்மது ஜலீல் கொடிகாத்த குமரனா, கட்சிக்காக ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து போராட்டம் நடத்தி சிறை சென்றாரா. இவர்களுக்கு பாடம் புகட்ட முகம்மது ஜலீலை தோல்வியடைய செய்ய வேண்டும். நான் இங்கு காது குத்து விழாவுக்கு வந்துள்ளேன். ஆனால், அங்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து காதுகுத்தி வருகின்றனர் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்