தலித் கிறிஸ்தவர்களுக்கு சலுகை: முதல்வருக்கு தங்கபாலு பாராட்டு

தலித் கிறிஸ்தவர்களின் குழந்தைகள் இந்து மதத்திற்கோ அல்லது புத்த, சீக்கிய மதத்திற்கோ மாறினால், அவர்கள் ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அந்த வகுப்பினருக்கான அனைத்து சலுகைகளும் வழஙக்ப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ. தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அந்த உத்தரவு குறித்த அரசாணையை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டிருப்பதை பத்திரிகை வாயிலாக அறிந்ததாகவும், இந்த அறிவிப்பிற்காக முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சாதி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்களும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் தொடர்ந்து உயர்ந்து அவர்கள் வாழ்வில் வளம்பெற வேண்டும் என்ற உன்னத கோட்பாட்டை தொடர்ந்து வலியுறுத்தி, அதற்காகவே தமது பொதுவாழ்வை அமைத்துக் கொண்டு, நாளும் உழைத்து வரும் முதல் அமைச்சர் கருணாநிதிக்கு இந்த நேரத்தில் தமது பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்தவ மதத்தில் இணைந்தால் மட்டும், அவர்களது வாழ்வில் கல்வி, பொருளாதார நிலைகளில் மாற்றம் வந்து விடுவதில்லை என்பதை உணர்ந்து மத்திய அரசில் அதற்கான கோரிக்கையை தாம் தொடர்ந்து வலியுறுத்து வந்துள்ளதாகவும் தங்கபாலு தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியின் தலித் கிறிஸ்தவர்களுக்கான சலுகை அறிவிப்பு அந்த மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்