தர்மபுரி விவகாரம்: ராம்தாசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்

ஞாயிறு, 27 ஜனவரி 2013 (16:54 IST)
FILE
தர்மபுரி அருகே உள்ள நத்தம் காலனியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேறு ஜாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட விவகாரம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெரிய அளவில் வெடித்தது.

காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்ட மோதலில் 3 தலித் கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி ஆகிய கிராமங்களில் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு பின்னர் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமதாஸ் தலைமையில் தியாகராய நகரில் இன்று அனைத்து சமூதாய தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 11.30 மணி அளவில் போக் ரோடு சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், திராவிடர் விடுதலை கழகத்தினரும் திடீர் என்று திரண்டு வந்தனர். ராமதாசின் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கூடி கோஷங்களை எழுப்பினர். அவர்களை மண்டபம் பகுதிக்கு சென்று விடாமல் போலீசார் சாலையின் நடுவே அரண்போல நின்றனர்.

இதுபற்றி கேள்விப்பட்டதும் மண்டபத்தில் இருந்த பா.ம.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் வெளியில் வந்தனர். எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தும் இடத்தை நோக்கி அவர்கள் ஓடினர். இதனால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

உடனே போலீசாரில் ஒரு பகுதியினர் பா.ம.க.வினரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டிருந்த பகுதியில் இருந்து சரமாரியாக கற்கள் வீசப்பட்டன.

இதில் மணிபாரதி என்ற போலீஸ்காரரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக துணியால் அவரது தலையில் கட்டிய போலீசார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோர் விரைந்து வந்து பா.ம.க வினரை சமாதானப்படுத்தி மண்டபத்துக்குள் அழைத்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி, திராவிடர் விடுதலை கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்