தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் நாளை துவக்கம்

ஞாயிறு, 1 மார்ச் 2009 (11:45 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 தேர்வுகள் நாளை (திங்கள்) தொடங்குகின்றன. மொத்தம் 6 லட்சத்து 90 ஆயிரம் மாணவ, மாணவிகள் இத்தேர்வுகளை எழுதுகின்றனர்.

வரும் மார்ச் 23ஆம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 தேர்வை ஐந்தாயிரத்து 40 பள்ளிகளைச் சேர்ந்த 6 லட்சத்து 47 ஆயிரத்து 632 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களைத் தவிர தனித் தேர்வர்களாக சுமார் 42 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக தமிழகம் மற்றும் புதுவையில் 1,738 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 403 பள்ளிகளில் படிக்கும் 47 ஆயிரத்து 857 மாணவ, மாணவிகள் 135 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் 87 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 965 மாணவ-மாணவிகள், 29 தேர்வு மையங்களில் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வுக்கான வினாத்தாள்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 245 வினாத்தாள் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விடைத்தாளின் முதல் பக்கத்தில் உள்ள பதிவு எண் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிஷம் கால அவகாசம் வழங்கும் முறையும் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது.

பிளஸ்-2 பொதுத் தேர்வின்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதற்காக, மாநிலம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க, முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ. முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தேர்வு அறையில் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்