தமிழகத்தில் 72.46 ‌‌விழு‌க்காடு வா‌க்கு‌ப்ப‌திவு

வெள்ளி, 15 மே 2009 (10:22 IST)
தமிழகத்தில் மக்களவை‌த் தேர்தலில் 72.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக கரூரில் 80.95 ‌விழு‌க்காடு‌ம், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக தேர்தல் வரலாற்றில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

கடந்த 13‌ஆ‌ம் தேதியன்று இறுதிக்கட்ட ‌ம‌க்களவை‌த் தேர்தல், தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் 72.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த சில ம‌க்களவை‌த் தேர்தல்களில் இதுபோன்று அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குப்பதிவு விவரம் வருமாறு (சதவீத அடிப்படையில்):

திருவள்ளூர் (தனி)- 69.19, வடசென்னை- 63.50, தென்சென்னை- 63, மத்திய சென்னை- 61.13, ஸ்ரீபெரும்புதூர்- 66.40, கா‌ஞ்‌சிபுரம் (தனி)- 74, அரக்கோணம்- 78.10, வேலூர்- 72.10, கிருஷ்ணகிரி- 70.13, தர்மபுரி- 70.53, திருவண்ணாமலை- 80.60, ஆரணி- 75.20.

விழுப்புரம் (தனி)- 74.90, கள்ளக்குறிச்சி- 76.76, சேலம்- 76.73, நாமக்கல்- 78.64, ஈரோடு- 74, திருப்பூர்- 74.60, நீலகிரி (தனி)- 70.70, கோயம்புத்தூர்- 70.83, பொள்ளாச்சி- 73.62, திண்டுக்கல்- 74.60, கரூர்- 80.95, திருச்சி- 67.88, பெரம்பலூர்- 78.30, கடலூர்- 75.98, சிதம்பரம் (தனி)- 75, மயிலாடுதுறை- 72.60.

நாகப்பட்டினம் (தனி)- 77.60, தஞ்சாவூர்- 73.55, சிவகங்கை- 71.21, மதுரை- 77.52, தேனி- 75.07, விருதுநகர்- 75.33, ராமநாதபுரம்- 68.41, தூத்துக்குடி- 69.09, தென்காசி (தனி)- 70.13, திருநெல்வேலி- 66.21, கன்னியாகுமரி- 64.50.

தமிழகத்தில் இந்த ம‌க்களவை‌த் தேர்தலில் (2009) மொத்த சராசரியாக 72.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு முன்பாக, தமிழகத்தில் 1967இல் மிக அதிகபட்சமாக, 76 சதவீத வாக்குகள் பதிவானது. 1971ஆம் ஆண்டில் 71.83 சதவீத வாக்குகளும், 1984இல் 73.09 சதவீத வாக்குகளும் அதிகபட்சமாக பதிவானது.

1984ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 25 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழகத்தில் அதிகபட்சமாக இப்போதுதான் அதிக அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 60.81 சதவீத வாக்குகளே பதிவாகின.

வெப்துனியாவைப் படிக்கவும்