தமிழகத்தில் மகப்பேறு மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.108 கோடி : குலாம் நபி ஆசாத்

வெள்ளி, 4 டிசம்பர் 2009 (20:34 IST)
தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் சுகாதார மையங்களை மேம்படுத்த மத்திய அரசு ரூ.108.53 கோடி ஒதுக்கியிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அமை‌ச்ச‌ர் குலா‌ம் ந‌பி ஆசா‌த் எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது :

சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு பயிற்சி மையம், திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை, எழும்பூரில் உள்ள சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை பயிற்சி மையம், திருவல்லிக்கேணியில் உள்ள பல்நோக்கு சுகாதார கண்காணிப்பாளர் பயிற்சி மையம் ஆகியவற்றை மேம்படுத்த தேசிய கிராமப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் மத்திய அரசு ரூ.108.53 கோடி ஒதுக்கியுள்ளது.

புறநோயாளிகள் சேவை, சிறப்பு மருத்துவ சேவைகள், பரிசோதனை சேவைகள், ஒருங்கிணைந்த அவசர மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், சுகாதார பணியாளர்களுக்கான பயிற்சி, அடிப்படை கட்டுமான வசதிகள் புதுப்பித்தல் போன்றவை இதன் மூலம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்து‌ள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்