தமிழகத்திற்கு புதிதாக 4,000 மினி பேருந்துகள்: விரைவில் அறிவிப்பு

ஞாயிறு, 25 அக்டோபர் 2009 (10:49 IST)
தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் மினி பேருந்துகளுக்கு பர்மிட் வழங்குவது பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் தாலுகா லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர் சங்க வெள்ளி விழா கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்திந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவர் செங்கோடன் உருவச்சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.

இதில் பங்கேற்று சிலையைத் திறந்து வைத்த பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “தமிழகத்தை பொறுத்தவரை, 3,800 மினி பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்கு நிரந்தரமான பர்மிட் வழங்கப்படாமல் உள்ளது. ஒவ்வொரு முறையும், அதற்கான அனுமதிக் காலம் மட்டும் நீட்டிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மின் பேருந்துகளுக்கு நிரந்தர பர்மிட் வழங்குவது பற்றி முதல்வரிடம் தெரிவித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். புதியதாக 4,000 மினி பஸ்களுக்கு பர்மிட் வழங்குவது சம்பந்தமாக முடிவு எடுக்கப்பட்ட உள்ளதால் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்