தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துவோம்- சீமான்

சனி, 18 மே 2013 (14:21 IST)
FILE
நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கடலூரில் நடைபெறவிருந்த பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை தடை விதித்ததையடுத்து, தடையை மீறி பொதுக்கூட்டத்தை நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில், கடலூரில் இன்று மே 17 முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்து, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்கக் கோரி கடலூர் காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதில் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் பொதுக்கூட்டத்துக்கும் காவல்துறையினர் தடை விதித்து, நாம் தமிழர் மாவட்டச் செயலர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.

புதுச்சேரியில் தங்கியிருந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து பேசியபோது, கடலூரில் இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டிமிட்டிருந்தோம். நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ஏற்பாடுகள் எல்லாம் செய்து விட்டோம். இந்நிலையில் இன்று காலை திடீரென்று கூட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

காவல்துறை இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் காவல்துறையினர் இன்று அனுமதி மறுத்துள்ளனர். எனவே, நாங்கள் நீதிமன்றம் சொன்ன படி, காவல்துறையினரின் தடையை மீறி இன்று பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்று சீமான் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்