தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதன், 28 டிசம்பர் 2011 (14:01 IST)
தஞ்சை பெரிய கோவிலுக்கு வெடி குண்டு வைத்திருப்பதாக சென்னை காவல்துறையினருக்கு வந்த மிரட்டலை அடுத்து, தஞ்சை பெரிய கோவிலில் நேற்று நள்ளிரவு தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற ஒரு நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சங்கர்(36). பார்வையற்றவரான இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், சங்கர் போலீசில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த சங்கர், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, தஞ்சை பெரிய கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என்றும், இரவு குண்டு வெடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்தத் தகவல், தஞ்சை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் உள்ளிட்டோர் தஞ்சைப் பெரிய கோயிலில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தினர். இடையி்ல் மிரட்டல் வந்த போனை கண்காணித்த போலீசார், சங்கரை அ‌திகாலை கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்த சங்கர், கோயிலில் குண்டு எதுவும் வைக்கவில்லை; இது வெற்று மிரட்டல்தான் என்று கூறினார். இதனை உறுதிப்படுத்திய பின்னர், போலீசார் கோயிலில் வெடிகுண்டு தேடும் பணியை கைவிட்டனர். இதனால் நேற்று நள்ளிரவு முதலே தஞ்சை நகரில் பெரும் பரபரப்பு நிலவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்