டி.எம்.எஸ். தமிழ்த் திரையுலகிற்குக் கிடைத்த பெருமைமிக்க கொடையாவார்: நாம் தமிழர் கட்சி

ஞாயிறு, 26 மே 2013 (14:12 IST)
FILE
தமிழ் திரை இசையில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடிய, மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர ராஜன் தலைமுறைகளைக் கடந்த மாபெரும் பாடகர் என்று நாம் தமிழர் கட்சி தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தனது ஈடிணையற்ற குரல் வளத்தாலும், தன்னிரகற்ற திறனாலும் 60 ஆண்டுக்காலத்திற்கு தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி பாடி, தமிழ் நெஞ்சங்களிலெல்லாம் இனிப்பான நினைவுகளை மிதக்கவிட்ட பாடகர் டி.எம். செளந்திரராசன் அவர்களின் மறைவிற்கு நாம் தமிழர் கட்சி புகழஞ்சலி செலுத்துகிறது.

அவர் வாழ்ந்த காலத்தில், தமிழ்த் திரையுலகி்ல் அவர் உச்சத்தைத் தொட்டபோது பிறந்திராத மக்களெல்லாம் கூட, அவருடைய இனிமையான குரலால் இன்றளவும் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்பதே டி.எம்.எஸ்.சின் குரல் வளத்திற்கும், திறனுக்கும் அத்தாட்சியாகும். தலைமுறைகளைக் கடந்த மாபெரும் பாடகர் அவர். தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆருக்கும், நடிப்பிற்கு இலக்கணம் கண்ட நடிகர் திலகம் சிவாஜிக்கும், அவர்கள் பேசும் குரல் போலவே தொணிக்கும் வகையில் பாடலைப் பாடி அசத்திய திறன் வேறு எந்த ஒரு பாடகரும் நிரூபிக்க முடியாத பெருமைக்குரியதாகும்.

திரைப்பாடல்கள் மட்டுமின்றி, பல்லாயிரக்கணக்கில் அவர் பாடிய பக்திப் பாடல்களும் இன்றளவும் இசைக்கப்படுகின்றன. ஒலிப் பதிவில் மிகக் குறைந்த தொழில்நுட்ப வசதிகள் மட்டுமே இருந்த காலத்தில் தனது குரல் வளத்தின் மூலம் அவர் நிகழ்த்திய சாதனை தமிழினத்தின் பெருமைக்குரிய வரலாற்றில் இடம்பெறத் தக்கதாகும். 91 வயது வரை வாழ்ந்து மறைந்த டி.எம்.எஸ்.சின் புகழ் தமிழ் வாழும் வரை மறையாமல் நீடிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்