ஜெ மீதான தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல முறையீடு - கருணாநிதி

சனி, 27 ஏப்ரல் 2013 (15:58 IST)
FILE
கடந்த 2001ஆம் தேர்தலில் ஜெயலலிதா தேர்தல் விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால், இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்ற சட்டத்தையும் மீறி 2001ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மறைந்த குப்புசாமியும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயனும் மேலும் சில உறுப்பினர்களும் கடந்த 9.8.2001 அன்று தேர்தல் கமிஷனுக்கு முறையீடுகள் அனுப்பினர்.

தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்காததால் அப்போது திமுக நாடாளுமன்ற குழு தலைவராக இருந்த குப்புசாமி 8.3.2002 அன்று உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். குப்புசாமி தாக்கல் செய்த அந்த ரிட் மனுவில் 13.6.2007 அன்று தீர்ப்பளித்த நீதிமன்ற தீர்ப்பின்படி புதுக்கோட்டை மற்றும் பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்டுகள் முன்பு புகார்களும் தேர்தல் அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டன. உயர் நீதி மன்றத் தீர்ப்பினை எதிர்த்து ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

21.11.2012 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் வழக்கினை மீண்டும் விசாரித்து நான்கு மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியது. திரும்ப அனுப்பப்பட்ட வழக்கினை விசாரித்த நீதியரசர் எலிப்பி தர்மராவ் நீதியரசர் வேணுகோபால் ஆகியோரைக் கொண்ட அமர்வு, கடந்த 6.3.2013 அன்று விசாரணை முடித்து தீர்ப்பு வழங்குவதற்காக ஒத்திவைத்தது.

இந்நிலையில் கடந்த 19.4.2013 குப்புசாமி காலமாகிவிட்டார். ஏற்கனவே இந்த வழக்கில் மறைந்த குப்புசாமியுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த ஏ.கே.எஸ். விஜயன், குப்புசாமி இறந்து விட்டதால் அவர் தொடர்ந்த வழக்கினை தானே தொடர்ந்து நடத்த முடிவு செய்து 22.4.2013 உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதியரசர் எலிப்பி தர்மராவ் நீதியரசர் மாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு, விஜயனுக்கு இவ்வழக்கில் தன்னை இணைத்து தொடர்ந்து வழக்கை நடத்த உரிமை இல்லை என கூறி கடந்த 25.4.2013 அன்று தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளனர்.

சட்டக் கோட்பாடுகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்பதால், இவ்வழக்கு விஜயனால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்