ஜாகிர் உசேனை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Ilavarasan

செவ்வாய், 6 மே 2014 (09:54 IST)
சென்னையில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் உளவாளியை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை ரயில் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று காவல்துறையினர் அவரிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
சென்னையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அன்று இலங்கையைச் சேர்ந்த முகமது ஜாகீர் உசேன் (வயது 37) என்பவர் கியூ பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளால், சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர் என்றும், உளவுபார்ப்பதற்காக சென்னையில் 6 மாதங்கள் தங்கி இருந்தார் என்றும் கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர். ஜாகீர் உசேன், நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரோடு தொடர்பு வைத்திருந்ததாக, இன்னொரு இலங்கை ஆசாமி சிவபாலன், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சலீம் ஆகியோரையும் கியூ பிரிவு காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். அவர்களும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில், பாகிஸ்தான் உளவாளி என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஜாகீர் உசேனை காவலில் எடுத்து விசாரணை நடத்த, கியூ பிரிவு காவல்துறையினர் முடிவு செய்தனர். 9 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, கியூ பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மோகனவேலு, சென்னை எழும்பூர் 13 ஆவது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
 
கைது செய்யப்பட்டுள்ள, ஜாகீர் உசேன், இலங்கையில் கண்டியை சேர்ந்தவர். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர் சுபேர் சித்திக், பாஸ் என்கிற ஷா ஆகியோருடன், ஜாகீர் உசேன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளார். அவர்களது உத்தரவின் பேரில் முகமது ஜாகீர் உசேன், சென்னைக்கு வந்து மண்ணடியில் கடந்த 6 மாதமாக ஒரு லாட்ஜில் தங்கி இருந்து உளவு பார்த்துள்ளார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேல் நாட்டு தூதரகத்தையும் குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். அதற்காக, இந்த தூதரகங்களின் புகைப்படங்களை எடுத்து, ஜாகீர் உசேன், இ மெயில் மூலம், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பிவைத்துள்ளார். செயற்கைகோள் செல்போன் மூலம் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் பேசி இருக்கிறார். அவரோடு தொடர்பு வைத்திருந்த மேலும் 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாகீர் உசேனின் நடவடிக்கைகள் பற்றி, மேலும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதற்காக 9 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நேற்று பகல் 11.30 மணி அளவில், எழும்பூர் 13 ஆவது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு சிவசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ஜாகீர் உசேனையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினார்கள். இதற்காக அவர் புழல் மத்திய சிறையில் இருந்து, எந்திர துப்பாக்கி காவலுடன், நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
 
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் திரவியராஜ் ஆஜரானார். ஜாகீர் உசேன் சார்பில் வக்கீல் ஜெய்னுல் ஆப்தீன் ஆஜரானார். காவலில் விட, அவர் எதிர்ப்பு தெரிவித்தார். 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த, மாஜிஸ்திரேட்டு சிவசுப்பிரமணியன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். உடனடியாக, ஜாகீர் உசேனை கியூ பிரிவு காவல்துறையினர், வேனில் அழைத்துச் சென்று விட்டனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, முகத்தை மூடிய நிலையில்தான் அழைத்து வந்தனர்.
 
ஜாகீர் உசேன் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெய்னுல் ஆப்தீன், எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அவர் கூறியதாவது,
 
நான் மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பாளராக இருக்கிறேன். சமூக ஆர்வலர் என்ற முறையில் இந்த வழக்கில், ஜாகீர் உசேன் சார்பில் ஆஜராகி இருக்கிறேன். கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் அவரை சந்தித்து பேசினேன்.
 
ஜாகீர் உசேன் மீது, பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் சென்னைக்கு துணி வியாபாரம் செய்ய அடிக்கடி வந்து செல்வார். கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்றும் சென்னை வந்துள்ளார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து அவரை முதலில் பிடித்துள்ளனர். பின்னர் அவரை விடுதலை செய்து விட்டனர். அதற்கு பிறகு மீண்டும் கைது செய்திருக்கிறார்கள். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு என்றால் என்னவென்று, அவருக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளோடு, அவர் எந்த தொடர்பும் வைக்கவில்லை. அது தொடர்பான ஆதாரங்கள் எதையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. வருகிற 8 ஆம் தேதி அன்று ஜாகீர் உசேன் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரது மனைவியும், 5 வயது பெண் குழந்தையும் இலங்கையில் வசிக்கிறார்கள். அவரது மனைவி தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
 
ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 2 நாளில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி பலியானார். ரயிலில் இருந்த 14 பயணிகள் காயம் அடைந்தனர்.
 
இந்த குண்டு வெடிப்பு வழக்கில் ஜாகீர் உசேனுக்கு தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு இருந்து வந்தது. தற்போது காவலில் இருக்கும் ஜாகீர் உசேனிடம், குண்டு வெடிப்பு பற்றியும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. குண்டு வெடிப்பு வழக்கை விசாரிக்கும், சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகள் ஜாகீர் உசேனிடம் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
 
இதற்கிடையில் ஜாகீர் உசேனோடு எந்த தொடர்பும் வைக்கவில்லை என்றும், இந்தியாவில் உளவு பார்க்கும் நடவடிக்கையில் தாங்கள் ஈடுபடவில்லை என்றும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்