ஜல்லிக்கட்டு தடை நீக்க மறுபரிசிலனை மனு: தமிழக அரசு முடிவு!

சனி, 12 ஜனவரி 2008 (21:07 IST)
ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நீக்குவதற்கு உச்ச நீதிமன்றத்திலேயே மறுபரிசீலனை மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு விளையாட்டு காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை நீதிமன்ற அமர்வு, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தடை மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்ட மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவினியாபுரத்தில் இன்று பதற்றமாக இருந்தது.

அலங்காநல்லூரில் இன்று கடையடைப்பு நடந்தது. பாலமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை கடையடைப்பு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வரும் 14ஆம் தேதி இம்மனுவை தாக்கல் செய்யவதற்காக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், மதுரை மாவட்ட அரசு, காவல் அதிகாரிகள் ஆகியோர் கொண்ட குழு நாளை காலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்