சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டுகள் சிறை

வியாழன், 1 மார்ச் 2012 (01:34 IST)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. கோமதி சீனிவாசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது திருச்சி நீதிமன்றம்.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கோமதி சீனிவாசன் 13.5.1996 முதல் 14.5.2001 வரை எம்எல்ஏ ஆக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, அவர் மீது தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2003-ம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்தப் பிரிவின் அப்போதையக் காவல் ஆய்வாளர் கே. மாணிக்கவாசகம் விசாரணை மேற்கொண்டு, கோமதி சீனிவாசன் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 13.22 லட்சத்துக்குச் சொத்து சேர்த்ததாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக திருச்சி சிறப்பு தனி நீதிமன்றத்தில் தஞ்சாவூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் இரா. அரங்கராசன், ஆய்வாளர் சிவ வடிவேல் உதவியுடன், அரசு தரப்பில் அரசுத் துணைச் சட்ட ஆலோசகர் எஸ். ரவிச்சந்திரன் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட திருச்சி சிறப்பு தனி நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர், குற்றஞ்சாட்டப்பட்ட கோமதி சீனிவாசனுக்கு 3 ஆண்டு, 4 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது (1980- 84) கோமதி சீனிவாசன் அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர், திமுகவில் சேர்ந்து அவர் எம்எல்ஏ ஆனார்.

வெப்துனியாவைப் படிக்கவும்